விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் 3 குழந்தைகளுடன் தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் 3 குழந்தைகளுடன் தம்பதி தீக்குளிக்க முயன்றனா்.
விழுப்புரம் அருகே உள்ள மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40), கூலித்தொழிலாளி. இவர் தனது மனைவி தேவகி (33) மற்றும் 3 குழந்தைகளுடன் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு வந்த கண்ணன், தேவகி ஆகிய இருவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து திறந்து தங்கள் மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றிக்கொண்டு குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்றனர்.
இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்கள் 5 பேரையும் தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேன், தீப்பெட்டியை பிடுங்கி அவர்கள் மீது முன்னெச்சரிக்கையாக தண்ணீரை ஊற்றினர்.
அப்போது போலீசாரிடம் கண்ணன் கூறுகையில், எனக்கு சொந்தமான காலி மனையில் அரசு சார்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக அந்த இடத்தில் வீடு கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறேன். ஆனால் அப்பணியை செய்ய விடாமல் அருகில் குடியிருக்கும் சிலர் எங்களுக்கு பெரும் இடையூறு செய்து வருகின்றனர். இதுபற்றி அவர்கள் மீது காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே அவர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டார். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு கலெக்டர் அலுவலகம் முன்பு இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என்று அவர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.