அரசு பஸ் மோதி தம்பதி பலி

வேடசந்தூரில், ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதியதில் தம்பதி பலியாகினர்.

Update: 2023-04-05 16:47 GMT

ஸ்கூட்டரில் தம்பதி பயணம்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா வாணிக்கரை ஊராட்சி கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 68). விவசாயி. அவருடைய மனைவி நல்லம்மாள் (59). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி விட்டது.

இந்தநிலையில் வேடசந்தூரில் வசிக்கிற தன்னுடைய மூத்த மகள் பொன்னுத்தாயை பார்ப்பதற்காக பொன்னுச்சாமியும், நல்லம்மாளும் ஸ்கூட்டரில் நேற்று சென்றனர். ஸ்கூட்டரை பொன்னுச்சாமி ஓட்டினார். நல்லம்மாள் பின்னால் அமர்ந்திருந்தார். வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் சாலையில் ஸ்கூட்டா் சென்று கொண்டிருந்தது.

அரசு பஸ் மோதி பலி

இதேபோல் வேடசந்தூரில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ்சை செல்வராஜ் (50) ஓட்டினார். பஸ்சில் 40 பயணிகள் பயணம் செய்தனர்.

இந்தநிலையில் வேடசந்தூர் அய்யனார்நகர் பிரிவில் திடீரென பொன்னுச்சாமி ஸ்கூட்டரை திருப்பினார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க சக்கரத்தில் ஸ்கூட்டர் சிக்கியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் நல்லம்மாள் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பொன்னுச்சாமி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பொன்னுச்சாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்