சாலை தடுப்புச்சுவரில் கார் மோதி தம்பதி பலி

சின்னாளப்பட்டி அருகே சாலை தடுப்புச்சுவரில் கார் மோதி தம்பதி பலியாகினர். அவர்கள் மகன்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-06-07 19:00 GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 65). இவரது மனைவி பரமேஸ்வரி (60). இவர்களது மகன்கள் மணிகண்டன் (40), பிரபு (30). மணிகண்டன் சுற்றுலா வேன்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.

இவர்கள் 4 பேரும் நேற்று, கோபிசெட்டிபாளையத்தில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். காரை பிரபு ஓட்டினார். அவருக்கு அருகே முன் சீட்டில் பரமேஸ்வரி அமர்ந்திருந்தார். பின்பக்க சீட்டில் பாலசுப்பிரமணியன், மணிகண்டனும் இருந்தனர்.

தடுப்புச்சுவரில் மோதியது

நேற்று மாலை சுமார் 3.30 மணியளவில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே அவர்கள் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடியது.

பின்னர் சாலையின் மையப்பகுதியில் இருந்த தடுப்புச்சுவரில் கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

தம்பதி பலி

இதில் படுகாயம் அடைந்த பரமேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாலசுப்பிரமணியன், பிரபு, மணிகண்டன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்த அம்பாத்துரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். பலியான பரமேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் இறந்தார். பிரபு, மணிகண்டன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஏர் பலூன் வெடித்தது

அதில் காரில் பயணம் செய்தவர்கள் 'சீட் பெல்ட்' மாட்டி இருந்ததாகவும், விபத்து ஏற்பட்டபோது முன் பக்கத்தில் கார் சீட்டின் எதிரே பொருத்தப்பட்டிருந்த ஏர் பலூன் வெடித்து 2 பேரும் படுகாயம் அடைந்து, அதில் ஒருவர் சம்பவ இடத்தில் இறந்ததாகவும் தெரியவந்தது.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கோவிலுக்கு சென்றபோது விபத்தில் சிக்கி தம்பதியினர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்