உறவினர்களுடன் தம்பதி தர்ணா

கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்களுடன் தம்பதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-08-14 19:50 GMT

பண்ருட்டி வைகுண்டவாசகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவருடைய மனைவி உமா. இவர்கள் நேற்று தங்களது உறவினர்களுடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பார்த்திபன் கூறுகையில், நான் பூ வியாபாரம் செய்து வருகிறேன். என்னுடைய நிலம் உள்பட 6 பேரின் நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளார். இது பற்றி பண்ருட்டி போலீசில் புகார் செய்தும், நடவடிக்கை இல்லை. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், ஆக்கிரமிப்பு செய்தவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்தநிலையில், என்.எல்.சி. தொழிலாளர்கள் பேச்சுவார்த்தைக்காக வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். அவரை பார்த்ததும் பார்த்திபன் மற்றும் அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றார். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார், நீண்ட நேர பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, கலெக்டரிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்