காலியான இடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல்: 6 பதவிகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

சேலம் மாவட்டத்தில் காலியான இடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் 6 பதவிகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-07-11 20:55 GMT

சேலம்,

சேலம் மாவட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் உள்பட 12 பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தெத்திகிரிப்பட்டி, மின்னாம்பள்ளி, பூவனூர், புள்ளாக்கவுண்டம்பட்டி, எலவம்பட்டி, நீர்முள்ளிக்குட்டை ஆகிய ஊராட்சிகளில் காலியாக உள்ள 6 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனால் மீதமுள்ள சேலம் ஒன்றியம் 8-வது வார்டு கவுன்சிலர், ஊராட்சிகளில் நடுப்பட்டி 7-வது வார்டு, தேவியாக்குறிச்சி 2-வது வார்டு, கிழக்கு ராஜபாளையம் 9-வது வார்டு, கூணான்டியூர் 7-வது வார்டு, பொட்டனேரி 6-வது வார்டு ஆகிய பதவிகளுக்கு கடந்த 9-ந் தேதி வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடந்தது. எந்த விதமான அசம்பாவிதம் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. சேலம் ஒன்றியம் 8-வது வார்டில் பதிவான வாக்குகள் சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல், ஊராட்சிகளில் 5 வார்டுகளுக்கு நடந்த வாக்கு பெட்டிகளும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், 6 பதவிகளுக்கு நடந்த வாக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் வெற்றி பெற்றவர்களின் விவரம் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்