தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் நடந்தது.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் நடந்தது. கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் குறைபாடுகளை நீக்கவும், 1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள 8 வயது நிரம்பிய அனைத்து மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலத்தில் எழுத்துகளை அடையாளம் கண்டு பிழையின்றி, பொருள் அறிந்து தெளிவாக எழுதவும், வாசிக்கவும், கணித செயல்பாடுகளை அறிந்து திறனை மேம்படுத்தவும் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சிகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கக இணை இயக்குனர் குமார் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். மாவட்டம் முழுவதும் நடந்த பயிற்சியில் 1,800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கோல்டா கிரேனா ராஜாத்தி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் பெர்சியாள் ஆகியோர் ஆலோசனையின் பேரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.