கள்ளச்சாராயம் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

காவல்துறையை முதல்-அமைச்சர் கண்டிப்போடு செயல்படுத்தி கள்ளச்சாராயம் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Update: 2023-05-16 18:45 GMT


மரக்காணம் அருகே விஷ சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று மாலை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார்.

அதோடு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து அங்கிருந்த டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

கண்டிப்போடு செயல்படுத்த வேண்டும்

இந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளுக்கு எடுத்துக்காட்டு இதுபோன்ற கள்ளச்சாராய உயிரிழப்புகள். காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்-அமைச்சர் கண்டிப்போடு, காவல்துறையை செயல்படுத்த வேண்டும்.

இனி ஒரு இடத்தில்கூட கள்ளச்சாராய விற்பனை சம்பந்தமான புகார்கள் வரக்கூடாது. கள்ளச்சாராயம் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது முதல்-அமைச்சரின் கடமை. அந்தளவிற்கு காவல்துறையை கண்டிப்போடு செயல்படுத்த வேண்டும்.

போலீஸ் அதிகாரிகளின் துணை இல்லாமல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யவே முடியாது. வெறும் சஸ்பெண்டு நடவடிக்கை செய்தால் இழந்த உயிர்கள் வந்துவிடுமா?.

அ.தி.மு.க. ஆட்சியிலும் மரணங்கள்

அ.தி.மு.க. ஆட்சியிலும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடந்திருக்கிறது. இந்த முறை அதிக பலி ஏற்பட்டிருப்பதால் ஒட்டுமொத்தமாக கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து பேசுகிறார்கள்.

தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த ஆட்சி மட்டுமல்ல இனிவரும் காலங்களில் எந்த ஆட்சியாக இருந்தாலும் இதுபோன்ற துயர சம்பவம் ஏற்படக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட செயலாளர்கள் விழுப்புரம் எல்.வெங்கடேசன், கடலூர் சிவக்கொழுந்து, மாநில துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, திண்டிவனம் நகர செயலாளர் காதர்பாஷா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்