போடி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கவுன்சிலர்கள் தர்ணா

போடியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-07 17:08 GMT

போடி நகராட்சி அலுவலகத்துக்கு தி.மு.க.வை சேர்ந்த 3 கவுன்சிலர்கள், அ.தி.மு.க.வை சேர்ந்த 4 கவுன்சிலர்கள், பா.ஜ.க.வை சேர்ந்த 2 கவுன்சிலர் உள்பட 10 கவுன்சிலர்கள் நேற்று வந்தனர். அப்போது அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது, போடி நகராட்சி ஆணையராக தற்காலிக பொறுப்பு வகிக்கும் செல்வராணி மக்கள் நலப்பணிகளில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறார் என்றும், போடியில் புதிதாக கட்டப்பட்ட நகராட்சி காய்கறி மார்க்கெட் ஏலத்தில் தனிநபருக்கு ஆதரவாக அவர் செயல்பட்டு நகராட்சி துணைத்தலைவரின் சகோதரருக்கு அனைத்து கடைகளையும் ஏலத்தில் கொடுத்ததாகவும் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக ஏற்கனவே புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டதாக கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் சம்பவ இடத்துக்கு வந்து கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் போடி நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்