குளச்சல் நகராட்சி கூட்டத்தில் ஆணையரை மாற்றக்கோரி கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்-தள்ளுமுள்ளு
குளச்சல் நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குளச்சல்,
குளச்சல் நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகராட்சி கூட்டம்
குளச்சல் நகர்மன்ற சாதாரணக்கூட்டம் தலைவர் நசீர் தலைமையில் நடந்தது. ஆணையர் விஜயகுமார், துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், சுகாதார அலுவலர் தங்க பாண்டியன், நகரமைப்பு அலுவலர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்களின் விபரம் வருமாறு:-
அன்வர் சதாத் (சுயேட்சை)-நம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் எத்தனை பேர் உள்ளனர்?
சுகாதார அலுவலர்-56 பேர்.
அன்வர்-56 பேரும் என்ன வேலை செய்கின்றனர்?
சுகாதார அலுவலர்-அவர்களிள் பெயர் பட்டியல், வேலை விபரம் தருகிறேன்.
தலைவர்-குடிநீர் வினியோக பிரிவுக்கு தனியாக பணியாளர் இல்லை. அனைத்து நகராட்சிகளிலும் இப்படித்தான், துப்புரவு பணியாளர்கள் சிலர் குடிநீர் பிரிவில் பணி செய்வர்.
அன்வர்-தூய்மை பணியாளர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தூய்மை பணி செய்தாலும் நகரம் சுத்தம் ஆகும்.
சுரேஷ்குமார் (பா.ஜ.க)-நகராட்சியில் சான்றிதழ்கள் வாங்க முடியவில்லை. கேட்டால் பிரிண்டர் இல்லை என்று கூறுகின்றனர்.
ஆணையர்-பிரிண்டர் வாங்கப்பட்டுள்ளது. அதை பொருத்த வேண்டும்.
ரகீம் (தி.மு.க)-பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் அளித்து 3 மாதங்கள் ஆகியும், பெயர் மாற்றம் செய்யவில்லை. எங்கள் வார்டுகள் புறக்கணிக்கப்படுகிறது.
ரமேஷ் (காங்.)- வரி விதிப்பு செய்ய கொடுத்து பல நாட்களாகியும் வரி விதிப்பு செய்யவில்லை.
பனிக்குருசு (தி.மு.க)-எனது வார்டில் பூங்காவில் விளக்கு இல்லை.
தலைவர்-அருகில் உள்ள சோடியம் விளக்கு பூங்கா வரைக்கும் வெளிச்சம் தருகிறது.
அஜின்ரூத் (தி.மு.க)-பூங்காவில் 2 உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும்.
ரமேஷ்-என் வார்டு பணி சம்பந்தமாக மனு கொடுத்து 2 மாதம் ஆகிறது. தீர்மானத்தில் கொண்டு வரவில்லை.
ஆணையாரை மாற்ற வேண்டும்
ரகீம்-மக்கள் வரிப்பணத்தில் அதிகாரிகள் சொகுசாக உள்ளனர். மக்கள் பணி நடக்கவில்லை. ஆணையர் நமக்கு தேவையில்லை.
ஜாண்சன் (தி.மு.க)-ஆணையரிடம் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை. அப்படியானால் ஆணையர் இங்கு எதற்கு?
அஜின்ரூத்-இந்த ஆணையரை மாற்றக்கூடாது. இவரது நடவடிக்கையால் வரி பாக்கி ரூ.1 கோடி வரை வசூலாகி உள்ளது. வளர்ச்சிப்பணிகள் மேற்கொண்டு வருகிறார்.
வாக்குவாதம்
கவுன்சிலர் ரமேஷ்-ஆணையரை மாற்றித்தான் தீர வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இதனால் அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை அ.தி.மு.க. கவுன்சிலர் ஆறுமுகராஜா சமாதானப்படுத்தினார். பின்னர் அவர் கூட்டத்தை நடத்த விடாமல் தி.மு.க. கவுன்சிலர்களே வீண் வாக்குவாதம் செய்கிறீர்கள். இதனால் பொதுமக்களின் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்படுகிறது என்றார். தொடர்ந்து கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உள்ளிருப்பு போராட்டம்
அப்போது பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நகராட்சி கூடத்திற்கு வந்து கவுன்சிலர்களை சமாதானப்படுத்தினர். கவுன்சிலர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகிறது என கூறியவாறு தலைவர் வெளியேறினார். இதையடுத்து ஜாண்சன், ரகீம், ரமேஷ், பனிக்குருசு உள்பட கவுன்சிலர்கள் நகராட்சி கூடத்தில் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரவு வரை தொடர்ந்து நடந்தது.