ஓமலூர்:-
காடையாம்பட்டி ஒன்றியக்குழு அலுவலகம் முன்பு கவுன்சிலர்கள் போராட்டம் நடந்தது.
ஒன்றியக்குழு கூட்டம்
காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் வெங்கடேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர், ஒன்றிய குழு துணைத் தலைவர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ், வெங்கடேஷ், சாமுராய், குரு ஆகியோர் பேசும் போது, பொதுநிதியில் திட்டப்பணிகள் வைக்கப்பட்டு 7 மாதத்திற்கு மேலாகிறது. எனவே பொதுநிதியில் இருந்து அத்தியாவசிய பணிகளை செய்ய வேண்டும் என்றனர். அதற்கு பதில் அளித்து ஆணையாளர் பேசுகையில், பொது நிதி போதுமான அளவு இல்லை. எனவே பொதுநிதியில் இருந்து பணிகள் எடுக்க முடியாது என்றார்.
தர்ணா போராட்டம்
இதனால் கோபம் அடைந்த ஒன்றியக்குழு தலைவர் மாரியம்மாள் தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் என 17 பேர் ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், பொது நிதியில் இருந்து பணிகள் எடுக்காவிட்டால் அனைத்து கவுன்சிலர்களும் ராஜினாமா செய்வோம் என்று கூறிவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.