நகரசபை கூட்டத்தை நடத்த வேண்டும்- கவுன்சிலர்கள் 12 பேர் கலெக்டரிடம் மனு

சீர்காழியில் நகரசபை கூட்டத்தை நடத்த வேண்டும் என கவுன்சிலர்கள் 12 பேர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.;

Update: 2023-04-20 19:15 GMT

சீர்காழியில் நகரசபை கூட்டத்தை நடத்த வேண்டும் என கவுன்சிலர்கள் 12 பேர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

கலெக்டரிடம் மனு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரசபையை சேர்ந்த தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் 12 பேர் கலெக்டர் மகாபாரதியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. தி.மு.க.வைச் சேர்ந்த துர்காபரமேஸ்வரி நகரசபை தலைவராக உள்ளார். சீர்காழி நகராட்சியில் மாதாந்திர கூட்டம் முறையாக நடத்தப்படாமல், உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் செய்யப்படுகிறது. சுகாதார வசதி, அடிப்படை வசதிகளும் முறையாக செய்து தரப்படவில்லை.

இதை கண்டித்து கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நகரசபை கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி நகரசபை கூட்டம் நடத்தப்படும் என்று வார்டு உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

கூட்டம் ஒத்தி வைப்பு

ஆனால் திடீரென கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக நகரசபை தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எனவே சீர்காழி நகரசபை கூட்டத்தை உடனே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அடுத்த மாதம் சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில் சீர்காழியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளவில்லை.

12 நகரசபை உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமலேயே குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே டெண்டர் வழங்கப்பட்டு பணிகள் செய்யப்பட்டு முறைகேடு நடைபெற்றுள்ளது. எனவே உடனடியாக நகரசபை கூட்டத்தை நடத்தி வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்த வேண்டும், சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு தினத்தன்று பொது உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.

தூய்மை பணி

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மேலும் சீர்காழி நகராட்சியில் குப்பைகள் உடனடியாக அள்ளப்படாவிட்டால் 12 நகரசபை உறுப்பினர்களும் சேர்ந்து தூய்மை பணி மேற்கொள்ள உள்ளதாக நிருபர்களிடம் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்