மேட்டூர் நகராட்சி கூட்டத்தை புறக்கணித்த கவுன்சிலர்கள்

வளர்ச்சி பணிகள் நடைபெறாததை கண்டித்து மேட்டூர் நகராட்சி கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.;

Update: 2022-06-28 20:21 GMT

மேட்டூர்

வளர்ச்சி பணிகள் நடைபெறாததை கண்டித்து மேட்டூர் நகராட்சி கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.

நகராட்சி கூட்டம்

மேட்டூர் நகராட்சி கூட்டம் தலைவர் சந்திரா தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத்தலைவர் காசிவிசுவநாதன், நகராட்சி ஆணையாளர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சதாசிவம் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்ேபாது அவர் கூறும் போது, கவுன்சிலர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு தமிழகத்திலேயே சிறந்த நகராட்சி மேட்டூர் நகராட்சி என்ற பெயரை பெற்றுத் தரவேண்டும்.

திட்ட பணிகளை நிறைவேற்றுவதில் கட்சி பாகுபாடின்றி அனைவரும் பணியாற்ற வேண்டும். நகராட்சிக்கு தேவைகள் என்ன என்பதை எனது கவனத்திற்கு கொண்டு வந்தால் அதை சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும், முதல்-அமைச்சரிடமும் பேசி தேவைகளை பூர்த்தி செய்வேன் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சதாசிவம் எம்.எல்.ஏ. புறப்பட்டு சென்றார்.

வளர்ச்சி பணிகள்

பின்னர் நடந்த கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் ரங்கசாமி பேசும் போது, நகராட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறுவதில்லை. நகராட்சி நிதி வீணடிக்கப்படுகிறது. கடந்த 3 மாதங்களில் என்னென்ன பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற விவரத்தை அளிக்க வேண்டும். அதுவரை தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்றார்.

தி.மு.க. கவுன்சிலர் வெங்கடாசலம் பேசும்ேபாது, நகராட்சி 30 வார்டுகளில் தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. நகராட்சிக்கு சொந்தமான வாகனங்கள் பழுதடைந்து உள்ளன. இதனால் பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று தெரிவித்தார். இதன் பின்னர் கவுன்சிலர்கள் ரங்கசாமி, வெங்கடாசலம் ஆகியோர் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி வெளியே சென்றனர்.

வெளியேறினார்கள்

இதைத்தொடர்ந்து தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் வளர்ச்சி பணிகள் நடைபெறாததால், நாங்கள் கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என்று கூறி அங்கிருந்து அனைவரும் வெளியேறினார்கள். இதனால் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்