கவுன்சிலர் உண்ணாவிரத போராட்டம்

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் அதிகாரியை கண்டித்து கவுன்சிலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2023-02-20 11:21 GMT

உண்ணாவிரதம்

திருப்பத்தூர் நகராட்சி நகரமைப்பு அலுவலரை கண்டித்து நகராட்சி கவுன்சிலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பத்தூர் நகராட்சி 36-வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் மு.வெற்றி கொண்டான் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு 36-வது வார்டு பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களில் ரேஷன் கடை, அங்கன்வாடி, பள்ளி கூடுதல் கட்டிடங்கள் கட்ட இடங்களை அளந்து தரக்கோரி நகராட்சி நகரமைப்பு அலுவலர் கவுசல்யாவை சந்தித்து மனு கொடுத்தார்.

அதற்கு அவர் அலட்சியமாக பதில் அளித்ததாகவும், நகராட்சியில் தற்காலிகமாக பணிபுரியும் உதவியாளரை அல்லது ஆணையாளரை, தாசில்தாரை பார்க்கும்படி கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வெற்றிகொண்டான் நகராட்சி தலைவர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதிகாரி மீது குற்றச்சாட்டு

அவருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆணையாளர் ஜெயராமராஜா, கவுன்சிலர் வெற்றிகொண்டான்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கவுன்சிலர் வெற்றி கொண்டான் கூறுகையில், பொதுமக்கள் சார்பாக நான் வந்து கோரிக்கைகளை தெரிவித்தால், நகரமைப்பு அலுவலர் அலட்சியமாக பதில் கூறுகிறார். வீடுகள் கட்ட பொதுமக்கள் விண்ணப்பித்தால் நான்கு என்ஜீனியர்களை பார்க்கக் கூறுகிறார்.

எனது வார்டில் தாழ்த்தப்பட்ட, பட்டியல் இனத்தவர்கள் உள்ளார்கள். குடிசை வீடுகள் உள்ளது. ஆகையால் எனது வார்டை அவர் புறக்கணிக்கிறார். நிலம், மனை பிரிவுகளுக்கு மட்டும் உடனடியாக சர்வேயரை அழைத்து செல்கிறார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதற்கு நகராட்சி ஆணையாளர் எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் எனக் கூறினார். அதன்பேரில் அவர் எழுத்துப்பூர்வமாக நகரமைப்பு அலுவலர் மீது புகார் மனு அளித்தார். மேலும் நகராட்சி கவுன்சிலர்கள் சுதாகர், மதன், கோபிநாத், முஜிபுர் ரஹ்மான், சரவணன் நேரில் வந்து நகராட்சித் தலைவர் தற்போது ஈரோடு தேர்தலில் உள்ளதால் வந்தவுடன் நடவடிக்கை எடுக்க உறுதி அளித்ததன் பேரில் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்