விலை வீழ்ச்சியால் செடிகளில் பறிக்கப்படாமல் வீணாகும் பருத்தி

பருத்தி விலை வீழ்ச்சியால் செடிகளில் பருத்தி பறிக்கப்படாமல் வீணாகி வருகிறது. இதனால் பருத்தியை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2023-07-04 18:45 GMT

முதுகுளத்தூர், 

பருத்தி விலை வீழ்ச்சியால் செடிகளில் பருத்தி பறிக்கப்படாமல் வீணாகி வருகிறது. இதனால் பருத்தியை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பருத்தி விவசாயம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயத்தை விட பருத்தி மற்றும் மிளகாய் விவசாயமே அதிகமாக நடைபெற்று வருகின்றது. மாவட்டத்திலேயே முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய அதிகமான கிராமங்களில் சுமார் 15,000 ஏக்கருக்கு மேல் பருத்தி விவசாயம் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டும் முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய திருவரங்கம், காக்கூர், மிக்கேல்பட்டினம், கருமல், தேரிருவேலி, மட்டியாரேந்தல், தாழியாரேந்தல், ஆலங்குளம், பூசேரி உள்ளிட்ட பெரும்பாலான கிராமங்களில் பருத்தி விவசாயம் நடைபெற்று வருகின்றது. இதை தவிர கடலாடி, கமுதி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை உள்ளிட்ட தாலுகாவை சுற்றிய ஏராளமான கிராமங்களிலும் பருத்தி விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் போதிய மழை இல்லாததாலும், பூச்சி தாக்குதலாலும் பருத்தி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டது. இதனால் கடந்த ஆண்டு 1 கிலோ பருத்தி ரூ.120 வரை விலை போன நிலையில் தற்போது 1 கிலோ பருத்தி ரூ.45-க்கு மட்டுமே விலை போகின்றது. பருத்தி விளைச்சலும் பாதிக்கப்பட்டு விலையும் வெகுவாக குறைந்துள்ளதால் பருத்தியை நம்பி விவசாயம் செய்த முதுகுளத்தூர் தாலுகா மட்டுமல்லாமல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த பருத்தி விவசாயிகளும் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

விலைவீழ்ச்சி

இந்த ஆண்டு பருத்தி பஞ்சுக்கு விலை இல்லாமல் போனதால் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் பருத்தி செடிகளில் காய்த்து உள்ள பருத்திப்பஞ்சுகள் பறிக்கப்படாமல் காய்ந்து கருகி போய் கிடக்கின்றன. இதுகுறித்து கீழத்தூவல் கிராமத்தை உள்ள மாவட்ட விவசாய சங்க உறுப்பினர் கணேசன் கூறியதாவது:- கடந்த ஆண்டு பருத்திபஞ்சு ஒரு கிலோ ரூ.120 முதல் 140 வரை விலை போனது. இந்த ஆண்டு பருத்தி விளைச்சல் அதிகமாக பாதிக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் பருத்தியின் விலையும் குறைந்து விட்டது. இந்த ஆண்டு 1 கிலோ பருத்தி ரூ.40-க்கு மட்டுமே விலை போகின்றது. இதற்கு முக்கிய காரணம் பல இடங்களில் செயல்பட்டு வந்த பஞ்சாலைகள் மூடப்பட்டு விட்டதால் பருத்திப்பஞ்சுகளின் தேவையும் இல்லாததால் விலையும் குறைந்துவிட்டது. எனவே பருத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பருத்தி பஞ்சுகளை அரசே நல்ல விலை நிர்ணயம் செய்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.

விவசாயிகள் கோரிக்கை

ராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த பருத்தி விவசாயி செந்தில் கூறியதாவது:- இந்த ஆண்டு பருத்தி விவசாயம் கடுமையாக பாதித்துள்ளது. விளைச்சல் ஒருபுறம் பாதிக்கப்பட்டிருந்ததோடு விலையும் வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு கிலோ பருத்தி ஒரு ரூ.40 முதல் 45 வரை மட்டுமே என குறைந்த விலைக்கு தான் போகின்றது. இது பருத்தி விவசாயிகளுக்கு இந்த ஆண்டு அதிகமான நஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

எனவே கஷ்டப்பட்டு விவசாயம் செய்யும் பருத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பருத்தி பஞ்சுகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்து நல்ல விலை கொடுத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். இது ஒட்டுமொத்த விவசாயிகளின் விருப்பம் மற்றும் கோரிக்கையாகும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்