பருத்தி விவசாய பணிகள் தீவிரம்
நெற் பயிர் சீசன் முடிந்த நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் சுற்று வட்டார கிராமங்களில் பருத்தி விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
நெற் பயிர் சீசன் முடிந்த நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் சுற்று வட்டார கிராமங்களில் பருத்தி விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பருத்தி விவசாயம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயத்தை விட பருத்தி, மிளகாய் விவசாயமே அதிகமாக நடைபெற்று வருகின்றது. ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவை சுற்றிய பல கிராமங்களிலும் நடைபெற்று வந்த நெல் விவசாய பணிகள் முடிவுக்கு வந்துவிட்டன. தற்போது ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவை சுற்றிய ஆர்.எஸ்.மங்கலம், நாரல், கழனிக்குடி உள்ளிட்ட பல கிராமங்களிலும் பருத்தி விவசாயத்திற்காக பருத்தி விதைகளை தூவும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு சில கிராமங்களில் பருத்தி செடிகள் வளர்ந்து வரும் நிலையில் அந்த பருத்தி செடிகளுக்கு இடையே வளர்ந்து நிற்கும் களைகளை அகற்றி எடுக்கும் பணியிலும் பெண் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
களை அகற்றும் பணி
கோடைகால சீசன் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையிலும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பருத்தி செடிகளுக்கிடையே வளர்ந்திருக்கும் களைகளை பெண்கள் துணியால் தலையை மூடியபடி நின்று களைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவை சுற்றிய பல கிராமங்களில் தற்போது தான் பருத்தி விவசாய பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய பெரும்பாலான கிராமங்களில் பருத்தி செடிகளில் வளர்ந்து இருக்கும் பஞ்சுகளை பறித்து வியாபாரிகளிடம் கொடுக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.