குடிசையில் தீ விபத்து; பெண் படுகாயம்
வடக்குதாமரைகுளத்தில் குடிசையில் தீ விபத்து ஏற்பட்டு பெண் படுகாயம் அடைந்தார்.;
தென்தாமரைகுளம்
வடக்குதாமரைகுளத்தில் குடிசையில் தீ விபத்து ஏற்பட்டு பெண் படுகாயம் அடைந்தார்.
தூங்கி கொண்டிருந்தார்
தென்தாமரைகுளம் அருகே உள்ள வடக்கு தாமரைகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சங்கரன் நாராயணன், தொழிலாளி. இவரது மனைவி ஷீலா (வயது64). இவர்களது மகன் ஹரிகரன் (31). சங்கரன் நாராயணன் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இதனால், ஷீலா மகன் ஹரிகரனுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு ஹரிகரன் வெளியே சென்றிருந்தார். ஷீலா வழக்கம் போல் தூங்க சென்றார். அப்போது குடிைச வீட்டில் மெழுகுவர்த்தி எரிய வைத்திருந்தார்.
தீ பிடித்தது
நள்ளிரவு மெழுகுவர்த்தி சரிந்து விழுந்து குடிசை வீட்டில் தீ பிடித்தது. தொடர்ந்து தீ மள... மள...வென எரிந்து குடிசை முழுவதும் பரவியது. திடீரென கண்விழித்த ஷீலா குடிசை தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, அவர் 'காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...' என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்தனர்.
அதற்குள் குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. ஷீலா தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.