ரூ.5 கோடியில் மேம்படுத்த மாநகராட்சி முடிவு

சிவகாசி பெரியகுளம் கண்மாய் பகுதியை ரூ.5 கோடி செலவில் மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.

Update: 2023-09-06 21:24 GMT

சிவகாசி, 

சிவகாசி பெரியகுளம் கண்மாய் பகுதியை ரூ.5 கோடி செலவில் மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.

பெரியகுளம் கண்மாய்

சிவகாசி நகரின் மையப்பகுதியில் உள்ள பெரியகுளம் கண்மாய் நகரின் முக்கிய நீர்நிலை ஆகும். கடுமையான வெயில் காரணமாக கண்மாய் நீர் முற்றிலுமாக வற்றி தற்போது விளையாட்டு மைதானம் போல் காட்சி அளிக்கிறது. இந்த கண்மாயை மேம்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் தற்போது பெரியகுளம் கண்மாயை மேம்படுத்த திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் ரூ.5 கோடியே 30 லட்சம் செலவில் கண்மாய் பகுதியை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அரசின்அனுமதி கிடைத்தவுடன் கண்மாய் பகுதியில் மேம்பாடு பணி தொடங்கும். இதில் நடைமேடை, விளக்குகள், கம்பிவேலி போன்றவை அமைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பூங்காக்கள்

இதேபோல் நகரின் பல பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பூங்காக்கள் இருந்தும் போதிய பராமரிப்பு இன்றி பூங்காக்களை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. இதனை சரி செய்யவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தின் அருகில் உள்ள பூங்கா தற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் திருத்தங்கல் ஸ்டேண்டர்டு காலனி, கவிதா நகர், சிவகாசி கந்தபுரம் காலனி, ஆயில்மில் காலனி ஆகிய பகுதியில் ரூ.2 கோடியே 62 லட்சம் செலவில் புதிய பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய பூங்காக்கள் மற்றும் பெரிய குளம் கண்மாய் மேம்பாடு திட்டம் ஆகிய முயற்சிகள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பணிகளை விரைவில் தொடங்கி தரமாக செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்