மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Update: 2022-05-30 21:32 GMT

மதுரை, 

28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ), தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், மதுரை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்கம் (வி.சி.க.) ஆகியவை இணைந்து 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.

அதன்படி இந்த போராட்டம் நேற்று தொடங்கியது. மாநகராட்சியில் பணிபுரியும் சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதனால் மாநகராட்சி பகுதிகளில் தூய்மை பணி நேற்று பாதிக்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் சாலைகளில் குவிந்து கிடந்தன. தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு மேலவாசலில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அவர்களது கோரிக்கை விவரம் வருமாறு:-

மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் தினக்கூலி தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

சேம நலநிதி

2006-ம் ஆண்டு பணியில் சேர்ந்த தொகுப்பூதிய தொழிலாளர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். தமிழக அரசு தூய்மை பணியாளர்களுக்கு முன்களப்பணியாளர்கள் என்ற முறையில் அறிவித்த ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரத்தை வழங்க வேண்டும். மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட கிராமபஞ்சாயத்து தூய்மை பணியாளர்களை காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். அங்கு நிரந்தரமாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த சேம நலநிதி மற்றும் சிறப்பு சேமநலநிதியை பெற்று தர வேண்டும்.

மாநகராட்சியில் பணிபுரியும் தினக்கூலி மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தினச்சம்பளமாக அரசு அறிவித்த ரூ.625-ஐ வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்கியதில் விடுப்பட்டவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களிடம் 4 மணி நேர கையெழுத்து பெறும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்.

ஒப்பந்த முறை

ஊழியர்களை வார்டு விட்டு வார்டு மாற்றம் செய்வதை நிறுத்த வேண்டும்.ஒப்பந்த ஊழியர்கள் இறந்து போனால் அல்லது 60 வயது பூர்த்தியாகி விட்டால் அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பணி வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு ஓராண்டாக வழங்கப்படாமல் உள்ள சேமநலநிதியை பெற்று தர வேண்டும்.

நிரந்தரம் கொண்ட தூய்மை பணியில் ஒப்பந்த ஊழியர் முறையை கைவிட வேண்டும். வார்டு அலுவலகங்களில் பணியாளர்களுக்கு கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்