ஈரோடு ஆத்மா மின் மயானத்தில் தகனம் செய்ய புதிய நடைமுறைகள் அமல்- மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு

ஈரோடு ஆத்மா மின் மயானத்தில் தகனம் செய்ய புதிய நடைமுறைகளை அமல்படுத்தி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2022-05-29 21:16 GMT

ஈரோடு

ஈரோடு ஆத்மா மின் மயானத்தில் தகனம் செய்ய புதிய நடைமுறைகளை அமல்படுத்தி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் உத்தரவிட்டு உள்ளார்.

புதிய நடைமுறைகள்

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் ஆத்மா மின் மயானத்தில், இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய கடுமையான வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தது. இதனை எளிமையாக்க கோரி, மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் குறிஞ்சி தண்டபாணி, 39-வது வார்டு கவுன்சிலர் கீதாஞ்சலி செந்தில்குமார் ஆகியோர் ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமாரிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், சில வழிமுறைகளை மாற்றி புதிய நடைமுறைகளை பின்பற்றக்கோரி ஆத்மா நிர்வாகத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆத்மாவில் தகனம் செய்வதற்கு, இறந்தவருடைய புகைப்படம், இறந்தவரின் முகவரிக்கான ஆவணம் ஆதார் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் இவற்றில் ஏதேனும் ஒன்று, தகவல் தெரிவிப்பவர்களான இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள் (தந்தை, தாய், மகன், மகள், அண்ணன், தம்பி) 2 பேர், அண்டை வீட்டுக்காரர்கள் அல்லது அருகில் வசிப்பவர்கள் அல்லது இதர உறவினர்கள் 2 பேரின் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.

ஆவணங்கள்

இறந்தவர் மருத்துவமனையில் உயிரிழந்தால், மருத்துவமனையின் வெளியேற்ற சுருக்க அறிக்கையின் (டிஸ்சார்ஜ் சம்மரி) நகல் அல்லது டாக்டரின் சான்று (படிவம்-4) நகல் அளிக்கப்பட வேண்டும். வீட்டில் நடந்த இயற்கை மரணமாக இருந்தால் ரத்த சம்மந்தப்பட்ட உறவினரின் உறுதி மொழிச்சான்று அல்லது படிவம் 4ஏ-ன் நகல் அளிக்கப்பட வேண்டும். மருத்துவமனையில் இருந்து வாங்கப்பட்ட படிவம்-4 ஐ சமர்ப்பித்து இருந்தால் அதன் நகலினை மட்டும் பெற்றுக்கொண்டு அசல் படிவத்தினை மாநகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பித்து ஒப்புகை பெற்று கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

இயற்கையாக அல்லாமல் இதர மரணங்களான சாலை விபத்து, கொலை, தற்கொலை போன்றவைகளுக்கு பிரேத பரிசோதனை அறிக்கை நகல் அல்லது போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை நகல் வழங்கப்பட வேண்டும். மாநகராட்சிக்கு வெளியே இறப்பு நிகழ்ந்து, இங்கு தகனம் செய்வதாக இருந்தாலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும். ஆவணங்கள் ஏதும் இல்லை என்றால் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அல்லது செயல் அலுவலர், துப்புரவு ஆய்வாளர் சான்று பெற்று வழங்க வேண்டும். மேலும் ஆத்மாவில் தினசரி தகனம் செய்யப்படும் விவரங்களை அன்றைய மாலைக்குள் மாநகராட்சி நகர் நல அலுவலருக்கு முறையாக அறிக்கை அனுப்ப வேண்டும். இந்த வழிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்