மருத்துவர்களின் சிறப்பான சேவையால் கொரோனாவை வெல்ல முடிந்தது
மருத்துவர்களின் சிறப்பான சேவையால்தான் கொரோனாவை வெல்ல முடிந்தது என்று சபாநாயகர் அப்பாவு நாகர்கோவிலில் கூறினார்.
நாகர்கோவில்:
மருத்துவர்களின் சிறப்பான சேவையால்தான் கொரோனாவை வெல்ல முடிந்தது என்று சபாநாயகர் அப்பாவு நாகர்கோவிலில் கூறினார்.
பிரிவுபசார விழா
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவ அதிகாரியாக பணியாற்றியவர் ஆறுமுக வேலன். இவரும் இதே ஆஸ்பத்திரியில் மூளை, நரம்பியல் அறுவை சிகிச்சைத்துறை தலைவர் செல்வனும் நேற்று பணி ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு பிரிவுபசார விழா கல்லூரி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
விழாவுக்கு அரசு மருத்துவக்கல்லூரி டீன் திருவாசகமணி தலைமை தாங்கினார். ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ், துணை முதல்வர் லியோடேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பணி ஓய்வு பெற்ற டாக்டர்களுக்கு சால்வை அணிவித்து, பாராட்டி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனாவை வெல்ல முடிந்தது
அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களின் பணி, அர்ப்பணிப்பு மிகுந்த புனிதமான பணி. கொரோனா காலத்தில் டாக்டர்கள் தங்களது உயிரைப் பற்றிக்கூட கவலைப்படாமல் பல உயிர்களை காப்பாற்றினர். மருத்துவர்களின் சிறப்பான சேவையால்தான் அந்த கொடிய நோயை நம்மால் வெல்ல முடிந்தது.
அரசு மருத்துவமனையில்தான் தரமான மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப் படுத்தியுள்ள மக்களைத் தேடி மருத்துவம் மற்றும் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் ஏராளமான ஏழை, எளிய மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அணுக்கழிவு மையம்
பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்க கூடாது என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். எனவே கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் கோரிக்கை ஆகும், என்றார்.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவக்கல்லூரி அறுவை சிகிச்சைத்துறை தலைவர் ஜெயலால், பொதுமருத்துவத்துறை தலைவர் பிரின்ஸ் பயஸ், பேராசிரியர்கள் கிங்ஸ்லி, சுரேஷ்பாலன், முத்துக்குமார், கண்ணன், ஜோசப், முன்னாள் டீன் அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஓய்வு பெற்ற உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன், செல்வன் ஆகியோர் நன்றி கூறினர்.