மதுரை விமான நிலையத்தில் பயணிகளுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை

புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மதுரை விமான நிலையத்தில் இன்று முதல் கொரோனா பரிசோதனைகள் மீண்டும் தொடக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-12-23 18:45 GMT

புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மதுரை விமான நிலையத்தில் இன்று முதல் கொரோனா பரிசோதனைகள் மீண்டும் தொடக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய வகை கொரோனா

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் அதனை தடுக்கும் வகையில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால், அந்த நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஏதாவது அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கு பரிசோதனை செய்திட வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி, வெளிநாடுகளில் இருந்து மதுரைக்கு வரும் பயணிகளுக்கு, விமான நிலைய வளாகத்தில் இன்று (24-ந்தேதி) முதல் கொரோனா பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. மேலும், விமான நிலைய உள்வளாகத்திற்குள் வருபவர்கள் 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அல்லது கொரோனா இல்லை என சான்று வைத்திருக்கவேண்டும், கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அறிவுைர

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மதுரை விமான நிலையத்தை பொறுத்தவரையில், சிங்கப்பூர், இலங்கை, துபாய், சார்ஜாவில் இருந்து பயணிகள் அதிகளவு மதுரை வருகின்றனர். புதிய வகை கொரோனா பரவி வருவதை தொடர்ந்து, விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை மீண்டும் தொடங்க இருக்கிறது.

அதன்படி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீத அடிப்படையில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். 12-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த பரிசோதனை செய்யப்படும். 12-வயதுக்கும் குறைந்தவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் மட்டும் பரிசோதனை செய்யப்படும். பரிசோதனையில் பாசிட்டிவ் என தெரிந்தால் விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளின் முகவரியில் உள்ள மாவட்டங்களுக்கு தகவல் அனுப்பி அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை செய்யப்படும். கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் பணியாளர்கள் மதுரை விமான நிலையத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். கொரோனா விதிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்