குமரியில் 40 பேருக்கு கொரோனா

குமரி மாவட்டத்தில் புதிதாக 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.;

Update:2022-06-22 00:26 IST

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் புதிதாக 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா பரவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் நோய் பரவலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு உத்தரவிட்டது.

அதன்படி குமரி மாவட்டத்தில் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆசாாிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 120 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் சுகாதார பணியாளர்கள் மூலமாகவும், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மூலமாகவும் நேற்று 766 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வீட்டு தனிமையில் சிகிச்சை

அதாவது அகஸ்தீஸ்வரம்-1, கிள்ளியூர்-1, குருந்தன்கோடு-8, மேல்புறம்-6, முன்சிறை-9, நாகர்கோவில்-7, திருவட்டார்-2, தோவாளை-1, தக்கலை-3 மற்றும் கேரளாவில் இருந்து வந்த 2 பேர் என மொத்தம் 40 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் நோய் தொற்று அதிகம் உள்ளவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வீடுகளில் தனிமையில் இருப்பவர்களை அந்தந்த பகுதிகளை சேர்ந்த சுகாதார பணியாளர்கள் அவ்வப்போது கண்காணித்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குமரி மாவட்டத்தில் நேற்று பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 192 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்