தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 30 மாணவர்களுக்கு கொரோனா
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் 30 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கொரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வருகிறவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது.
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் 750-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பயின்று வருகின்றனர்.
விடுதி மாணவர்களுக்கு தொற்று
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் சுமார் 350 மாணவ-மாணவிகள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இவர்களில் 3 பேருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் அறிகுறி இருந்ததால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், சக மாணவர்கள் என 200 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ெமாத்தம் 30 மாணவ-மாணவிகளுக்கு தொற்று உறுதியானது.
இணையவழியில் பாடங்கள்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகளை விடுதியிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களுக்கு இணையவழியில் பாடங்கள் நடத்தப்படுகிறது.
இதற்கிடையே, அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.