பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 27 பேருக்கு கொரோனா
பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 27 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கொரோனாவுக்கு 50-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் 74 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று கொரோனவுக்கு 71 பேர் பாதிக்கப்பட்டனர். சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 22 பேர், காடையாம்பட்டியில் 5 பேர், சேலம் ஒன்றியம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், தாரமங்கலம், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், சங்ககிரி, கொங்கணாபுரம், கொளத்தூர், பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும் சேலம் மாவட்டத்துக்கு நாமக்கல்லில் இருந்து வந்த 6 பேர், வேலூர், ஈரோட்டில் இருந்து வந்த தலா 5 பேர், சென்னை, கரூரில் இருந்து வந்த தலா 4 பேர், கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட 525 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனாவுக்கு மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 29 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.