சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 61 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று 61 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 36 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று கொரோனா தொற்று பாதிப்பு திடீரென அதிகரித்து உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 61 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 26 பேர், ஆத்தூர், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், ஓமலூரில் 3 பேர், சேலம் ஒன்றியம், மேட்டூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், காடையாம்பட்டி, மகுடஞ்சாவடி, நங்கவள்ளி, சங்ககிரி, தலைவாசல், வாழப்பாடி, ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டனர்.
மேலும் சேலத்துக்கு தர்மபுரியில் இருந்து வந்த 3 பேர், கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தலா 2 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் உள்பட 301 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 38 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1 லட்சத்து 27 ஆயிரத்து 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.