மக்காச்சோள பயிரில் படைப்புழுக்கள் தாக்குதல்

Update: 2022-12-26 16:58 GMT


குடிமங்கலம் வட்டாரத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழுக்கள் தாக்குதல் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

10 ஆயிரம் ஏக்கர்

குடிமங்கலம் வட்டாரத்தில் மக்காச்சோளப்பயிரில் படைப்புழுக்கள் தாக்குதல் அதிக அளவில் காணப்பட்டது. இது குறித்து 'தினத்தந்தி' நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தா ஆய்வு மேற்கொண்டார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:-

குடிமங்கலம் வட்டாரத்தில் தென்னைக்கு அடுத்தபடியாக முக்கிய பயிராக மக்காச்சோளம் உள்ளது. இங்கு இதுவரை 10 ஆயிரம் ஏக்கருக்கு மேலாக மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மக்காச்சோளப்பயிர் பெருமளவில் தற்சமயம் கதிர் பால் பிடிக்கும் தருணத்தில் இருந்து கதிர் முற்றிய நிலை வரை உள்ளது. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மட்டும் மக்காச்சோள பயிர் வளர்ச்சி பருவத்தில் உள்ளது. அந்த வளர்ச்சிப் பருவத்தில் உள்ள மக்காச்சோளப் பயிர்களிலேயே தற்பொழுது படைப்புழுக்களின் தாக்குதல் காணப்படுகிறது. படைப்புழுவின் இளம் புழுக்கள் இலையின் அடிப்பகுதியை சுரண்டித் தின்னும். முதிர்ந்த புழுக்கள் இலை உரையின் உள்ளே சென்று கடித்து பாதிப்பு உண்டாக்கும். எனவே இலைகள் விரியும்போது வரிசையாக சிறு துளைகள் காணப்படும். படைப்புழுக்களைப் பொறுத்தவரை 20 முதல் 40 நாட்களை உடைய இளம் பயிர்களையே அதிகம் தாக்கி சேதத்தை ஏற்படுத்தும். எனவே இப்புழுக்களை ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்து கட்டுப்படுத்தலாம்.

கள ஆய்வு

ஒருமுறை உபயோகித்த மருந்தையே மீண்டும் உபயோகிக்கும் போது பலன் குறைவாகவே இருக்கும்.தற்போது பாதிப்புக்கு உள்ளான பயிர் 40 நாள் பயிராக இருப்பதால் எமாக்டின் பென்சோயேட் 5 எஸ்.ஜி 0.4 கிராம்லிட்டர் அல்லது ஸ்பைனிடிரோம் 11.70 எஸ்.ஜி 0.5 மிலி லிட்டர் என்ற அளவில் குருத்துப்பகுதி நன்கு நனையும்படி கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க விவசாயிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மக்காச்சோளப் பயிரில் தென்படும் பூச்சிகளைக் கண்காணித்து கட்டுப்படுத்த உதவி வேளாண்மை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கு தக்க பயிர் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்