13 இருசக்கர வாகனங்களின் சக்கரங்களை பூட்டிய போலீசார்

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 13 இருசக்கர வாகனங்களின் சக்கரங்களை போலீசார் பூட்டினர். இது தொடர்பாக 45 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-05-24 19:52 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 13 இருசக்கர வாகனங்களின் சக்கரங்களை போலீசார் பூட்டினர். இது தொடர்பாக 45 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்கள்

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, பட்டுக்கோட்டை, திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, திருச்செந்தூர், வேளாங்கண்ணி, நாகை, திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பஸ்களில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். வெளியூருக்கு செல்லக்கூடிய பலர் தங்களது ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்களை பஸ் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பயணிகளுக்கு இடையூறாகவும் நிறுத்திவிட்டு சென்றுவிடுகின்றனர்.

போலீசார் நடவடிக்கை

இந்தநிலையில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பயணிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்களின் சக்கரங்களை பூட்டினர். மேலும் பயணிகள் அமரக்கூடிய இடங்களில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் 7 ஸ்கூட்டர்களுக்கும், 6 மோட்டார் சைக்கிள்களும் பூட்டப்பட்டது. வெளியூரில் இருந்து வந்த 3 பேர் தங்களது மோட்டார் சைக்கிள்களுக்கு பூட்டு போடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

45 வழக்குகள்

பின்னர் போலீசார் தான் பூட்டினர் என்பதை அறிந்து, போலீசாரை தொடர்பு கொண்டு பேசினர். இதையடுத்து அவர்களை போலீசார் எச்சரித்ததுடன் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். மற்ற வாகனங்களின் உரிமையாளர்கள் போலீசாரை தொடர்பு கொள்ளாததால் அந்த வாகனங்கள் விடுவிக்கப்படவில்லை.

இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கூறும்போது, பயணிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியதாக 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்