உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.;
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நடைபெறுவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- உலக முதலீட்டாளர்கள் கூட்டம் இதற்கு முன்னதாக 2015 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்றது. தற்போது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் முதலீடுகளை ஈர்ப்பதில் முதன்மை மாவட்டமாக தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம் விளங்க வேண்டும். மேலும், கரூர் மாவட்டம் தொழில் சார்ந்த மாவட்டமாக இருப்பதால் நம்முடைய இலக்கை காட்டிலும் அதிக அளவில் முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும். தொழில்துறையில் தற்போது நிலவும் சவால்களை எதிர்கொள்வதற்கு ஏற்ப உலக முதலீட்டாளர்களுக்கு இது புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பாக இருக்க வேண்டும். தொழில் முனைவோர்கள் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு ஒற்றை சாளார் அனுமதிகளை பெற சம்பந்தப்பட்ட அரசு துறைகள் தாமதப்படுத்தவோ, தேவையில்லாமல் தள்ளுபடி செய்யவோக்கூடாது. தொழில் முனைவோர்களின் நலன் கருதி மாதம் ஒரு முறை தொழில்முனைவோருக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும், என்றார்.