கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் நெல்லை மாவட்ட கிளை சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் முத்துப்பாண்டியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
பயிர் கடன், நகைக்கடன், மகளிர்குழு கடன் தள்ளுபடிக்கு உரிய தொகையினை வட்டியுடன் முழுமையாக வழங்க வேண்டும். கடன் தள்ளுபடியில் விதிமீறல், நகை ஏலநடவடிக்கையில் நஷ்டம் என்று கூறி பணியாளர்களின் ஓய்வு கால நிதி பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை உடனே விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் நடராஜ கண்ணன், முருகேசன், இணைச்செயலாளர்கள் மாரியம்மாள், வீரியபெருமாள், பொருளாளர் மாரியப்பன், போராட்ட குழு தலைவர் பரமசிவன், செயலாளர் சந்திரலால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.