தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையை திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நேற்று மாலை கலெக்டர் வினீத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறும்போது, 'கடந்த 15-ந் தேதி முதல் கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும் 30 சதவீதம் அரசு சிறப்பு தள்ளுபடி விற்பனை செய்யப்படுகிறது. கடந்த தீபாவளி பண்டிகைக்கு மாவட்டத்தில் விற்பனை ரூ.99 லட்சத்து 56 ஆயிரம் என இருந்தது. இந்த தீபாவளி பண்டிகைக்கான விற்பனை இலக்கு ரூ.1 கோடியே 70 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டு, பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், ஆண்கள் அணியும் ஆயத்த சட்டைகள், மகளிர் விரும்பும் சுடிதார் ரகங்கள், ஆர்கானிக் பருத்தி சேலைகள், ஏற்றுமதி தரம் வாய்ந்த ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன' என்றார்.
இந்த விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் பிரியா, தலைவர் வெங்கடாசலம், நிர்வாக இயக்குனர் ரமேஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.