காயல்பட்டினத்தில் நடந்த விபத்தில் சமையல் தொழிலாளி சாவு

காயல்பட்டினத்தில் நடந்த விபத்தில் சமையல் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் ஒரு தொழிலாளி படுகாயங்களுடன் அரசு ஆஸ்பத்திரியில்சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2022-11-16 18:45 GMT

ஆறுமுகநேரி:

காயல்பட்டினத்தில் நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற சமையல் தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார். மற்றொரு தொழிலாளி படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சமையல் தொழிலாளி

காயல்பட்டினம் காட்டு தைக்காதெருவை சேர்ந்த சையது முகமது மகன் கவுது மொய்தின் (வயது 39). சமையல் தொழிலாளி. இவரது உறவினர் நாகூர்மீரான். இவரும் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலையில் இருவரும் ஆத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சமையல் வேலைக்குச் சென்றனர். அன்று மாலையில் ஆத்தூரில் இருந்த காயல்பட்டினத்துக்கு மீண்டும் மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கவுது பெர்லின் ஓட்டினார்.

விபத்து

ஆறுமுகநேரி கடலோர காவல் நிலையத்தில் இருந்து காயல்பட்டினம் செல்லும் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அங்குள்ள காயல்பட்டினம் உச்சினிமாகாளி அம்மன் கோவில் அருகே 4 சந்திப்பு சாலையில் சென்றபோது, அவருக்கு முன்னாலே மீன்ஏற்றிச் சென்ற மினிலாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் நிலைதடுமாறிய கவுது மொய்தின் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மினி லாரி மீதி மோதி வலது புறமாக சாய்ந்தது. மேலும் எதிரே வந்த கல்லூரி பஸ் மீதும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேரும் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்தனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு முதுலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சாவு

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே கவுது மொய்தின் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். பலத்த காயங்களுடன் நாகூர் மீரான் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் ஆஸ்பத்திரிக்கு சென்று, கவுது மொய்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்