கல்வி என்பது நாம் சந்திக்கும் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு தரும் கருவியாகும்

கல்வி என்பது நாம் சந்திக்கும் அனைத்து பிரச்சினைக்கும் நல்ல தீர்வு தரக்கூடிய ஒரு கருவியாகும் என்று பட்டமளிப்பு விழாவில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேசினார்.

Update: 2023-04-25 18:45 GMT

காரைக்குடி

கல்வி என்பது நாம் சந்திக்கும் அனைத்து பிரச்சினைக்கும் நல்ல தீர்வு தரக்கூடிய ஒரு கருவியாகும் என்று பட்டமளிப்பு விழாவில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேசினார்.

பட்டமளிப்பு விழா

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2017-2020-ம் கல்வியாண்டில் இளநிலை, முதுநிலை மற்றும் கலை அறிவியல் பாடங்களில் பட்டம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கான 71-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி தலைமை தாங்கி பட்டமளிப்பு விழா அறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி கலந்துகொண்டு 947 இளநிலை மாணவர்களும், 175 முதுநிலை மாணவர்களும் என மொத்தம் 1122 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:-

காரைக்குடி நகரை கல்வி நகரமாக மாற்றிய வள்ளல் அழகப்பர் தனது 38-வது வயதில் தொடங்கி 10 ஆண்டிற்குள் காரைக்குடி நகரில் கலைக்கல்லூரி, மாதிரி பள்ளி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, உடற்கல்வி கல்லூரி என பல்வேறு கல்வி நிறுவனங்களை தொடங்கி கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டார். இவ்வாறு அவர் தொடங்கிய இந்த கல்வி நிறுவனங்களை மட்டும் இல்லாவிட்டால் காரைக்குடி நகர் தற்போது ஒரு கிராமமாகவே இருந்திருக்கும். மேலும் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையின்படி தற்போது இந்திய அளவில் 54-வது இடத்தில் உள்ள அழகப்பா அரசு கலைக் கல்லூரி இன்னும் பல சாதனைகளை பெறும் என நம்பிக்கை உள்ளது.

தீர்வு தரக்கூடிய கருவியாகும்

கல்வி என்பது நாம் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வு தரக்கூடிய ஒரு கருவியாகவும், கல்வி என்பது மன ரீதியாக மாணவரை வலிமையானவனாக மாற்றும் என்ற வள்ளுவரின் வாக்குப்படி அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வி செல்வமே. மாணவ-மாணவிகள் பெற்ற இந்த பட்டம் என்பது நீங்கள் இதுவரை சந்தித்த கஷ்டங்களின் முடிவு அல்லாமல் உங்களின் சிறந்த எதிர்காலத்திற்கான புதிய தொடக்கம் ஆகும். மேலும் உங்களது பெற்றோர்களின் பெரும் தியாகத்தினால் பட்டம் பெற்ற நீங்கள் அனைவரும் அவர்களுக்கு நன்றி செலுத்தி அவர்களின் பாதையை பின்பற்றி நடக்க வேண்டும்.

போட்டி நிறைந்த இந்த உலகில் மாணவர்களாக நீங்களும் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் தொடர்பாற்றல், தலைமை பண்பு போன்ற பல்வேறு திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தோல்வி நிலையானது அல்ல , வெற்றி நிரந்தரமானது அல்ல என்பதையும் புரிந்துகொண்டு நம்பிக்கையும், கடின உழைப்பும், விடாமுயற்சியும் உங்களிடம் இருந்தால் பெரிய வெற்றியை அடைய முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைதொடர்ந்து பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் பட்டம் பெற்ற 41 மாணவ-மாணவிகள் அழகப்பா பல்கலைக்கழக அளவில் தரம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்