அரங்குகளை தேர்வு செய்ததில் சர்ச்சையா?
கூடலூரில் நடந்த வாசனை திரவிய கண்காட்சியில் இடம்பெற்று இருந்த அரங்குகளை தேர்வு செய்ததில் சர்ச்சையா? என்பது குறித்து விவசாயிகள், அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.
கூடலூர்
கூடலூரில் நடந்த வாசனை திரவிய கண்காட்சியில் இடம்பெற்று இருந்த அரங்குகளை தேர்வு செய்ததில் சர்ச்சையா? என்பது குறித்து விவசாயிகள், அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.
வாசனை திரவிய கண்காட்சி
கோடை விழாவையொட்டி கூடலூரில் 10-வது வாசனை திரவிய கண்காட்சி கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதில் தோட்டக்கலை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. 95 கிலோவில் குறுமிளகு, சோம்பு, கசகசா உள்பட பல்வேறு வகையான வாசனை திரவிய பொருட்களை கொண்டு ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படத்தில் இடம் பிடித்த ரகு, பொம்மி வளர்ப்பு யானைகள் உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தது.
வாசனை திரவிய பொருட்களால் தோட்டக்கலைத்துறை சார்பில் மட்டுமே அரங்குகள் அமைக்கப்பட்டது. கண்காட்சியை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்ததால், கண்காட்சி மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. அதன்படி கடந்த 17-ந் தேதியுடன் கண்காட்சி நிறைவடைந்தது. தொடர்ந்து நினைவு விழா நடைபெற்றது.
தேர்வு செய்ததில் சர்ச்சை
அப்போது கண்காட்சியில் சிறந்த அரங்குகள் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. வனத்துறை அமைத்த அரங்குக்கு முதல் பரிசும், வாசனை திரவிய பொருட்களை கொண்டு அரங்குகள் அமைத்திருந்த தோட்டக்கலைக்கு 2-வது பரிசும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த அரங்குகள் தேர்வு செய்ததில் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. மேலும் வாசனை திரவிய பொருட்களை கொண்டு பொதுமக்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட அரங்குக்கு முதலிடம் வழங்காமல், வனத்துறைக்கு சிறந்த அரங்கு பரிசு வழங்கப்பட்டற்கு விவசாயிகள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கூடலூர் பகுதியில் வாசனை திரவிய விவசாய பொருட்கள் விளைவதால் வாசனை திரவிய கண்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. ஊட்டி, குன்னூர் கோத்தகிரி பகுதியில் தோட்டக்கலைத்துறை சார்பில் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கூடலூரில் வருவாய்த்துறை மூலம் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு எந்த முக்கியத்துவம் அளிப்பதில்லை. தற்போது வாசனை திரவிய பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட தோட்டக்கலை அரங்குக்கு 2-ம் இடம் வழங்கப்பட்டது. இது சர்ச்சை ஆகியுள்ளது.
வழிகாட்ட வில்லை
எனவே, இனிவரும் காலங்களில் வாசனை திரவிய கண்காட்சியை தோட்டக்கலைத்துறை மூலம் நடத்த வேண்டும். தொடர்ந்து விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளின் விளைபொருட்களை அறிமுகப்படுத்தக்கூடிய கண்காட்சியாக மாற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சிறந்த அரங்குகள் தேர்வு செய்ததில் எந்த குளறுபடியும் இல்லை. வனத்துறை அரங்கில் வனத்துறையினர் பொதுமக்களுக்கு வழிகாட்டியாக இருந்தனர். ஆனால், தோட்டக்கலைத்துறை அரங்குக்கு வரும் பார்வையாளர்களை வழிகாட்ட எந்த ஊழியரும் இல்லை. இவ்வாறு சில நடைமுறைகள் பின்பற்றவில்லை. அதை முறையாக பின்பற்றியதால் வனத்துறை அரங்குக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது என்றனர்.