காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு: "யாருடைய மனமாவது புண்பட்டு இருந்தால் வருந்துகிறேன்" - ஆர்.எஸ்.பாரதி டுவீட்
பெருந்தலைவர் காமராஜர் குறித்த சர்ச்சைப் பேச்சுக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில், "பெருந்தலைவர் காமராஜர் தி.மு.க-வினரின் கட்டைவிரலை வெட்டுவேன் என்றார். ஆனால், அவருக்கு கல்லறை கட்டியதே நாம்தான். எந்த காங்கிரஸ்காரர்களும் அதைச் செய்யவில்லை. இன்றுவரை காமராஜருக்காக நாம் கட்டிய கல்லறையில்தான் அனைவரும் பூஜித்துக்கொண்டிருக்கிறார்கள். மன்னிக்க வேண்டும். நான் வரலாற்றைத்தான் சொல்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல" எனப் பேசியிருந்தார்.
காமராஜரைப் பற்றி ஆர்.எஸ்.பாரதி பேசியது அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இவரது பேச்சுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த நிலையில், காமராஜர் குறித்த சர்ச்சைப் பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"பெருந்தலைவர் காமராஜரை பற்றி நான் பேசியதை "வெட்டியும், ஒட்டியும்" பாஜக சார்ந்த சமூக வளைதளங்களில் வெளியிட்டுள்ளன. என்னுடைய முழு பேச்சை கேட்டால் உண்மை புரியும். இது குறித்து தெளிவாக பேட்டியளித்துள்ளேன், இருப்பினும் என் பேச்சால் யாருடைய மனமாவது புண்பட்டு இருந்தால் அதற்கு என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.