நெற்பயிரில் பாக்டீரியா இலை கருகல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

நெற்பயிரில் பாக்டீரியா இலை கருகல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2023-07-12 18:45 GMT

நெற்பயிரில் பாக்டீரியா இலை கருகல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இலை கருகல் நோய்

தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்களில் பாக்டீரியா இலை கருகல் நோய் தென்படுகிறது. இதன் அறிகுறிகளான இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, வைக்கோல் போல காய்ந்து, செடி முழுவதும் இறந்தது போல காட்சியளிக்கும்.

இளம் நாற்றுக்களை பார்க்கும்போது பாதிக்கப்பட்ட இலை பழுத்து மேல் நோக்கி சுருண்டு இருக்கும். இலையின் நுனிப் பகுதியில் இருந்து மஞ்சள், வெள்ளை நிறமாகி அதோடு மட்டுமல்லாமல் ஓரப்பகுதிகளில் அலை அலையாக வளைந்து நெளிந்து சுருண்டு காய்ந்தது போல காட்சி அளிக்கும். அதிகாலையில் வயல் வெளிகளில் இலைகளை பார்க்கும்போது இலையில் பால் போன்ற பாக்டீரியா திரவம் கசிவது போன்ற தோற்றத்தை பார்க்க முடியும். இந்த திரவம் காய்ந்து பிறகு மஞ்சள் வண்ணத்தில் மணிகள் போலவும் காட்சி அளிக்கும்.

பரவும் விதம்

நோய் தாக்கப்பட்ட வைக்கோல் வயல்களில் இருக்கும் போதும், களைகள் அதிகளவு வயலில் இருந்தாலும் இந்த நோய் நெற்பயிரை தாக்கும். அதிக காத்து, சூடான வெப்பநிலை, அதிக ஈரப்பதம், மழை இருக்கும் போதும் நோய் தாக்கப்பட்ட இலைகளில் உள்ள அந்த திரவம் மற்ற வயலுக்கு எளிமையாக பரவும்.

தழைச்சத்தை தேவைக்கு அதிகமாக கொடுக்கும் போதும் இந்த நோய் பரவ வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

மேலாண்மை முறைகள்

நோய் தாக்குதல் தெரிய ஆரம்பிக்கும் போது 20 சதவீதம் சாண கரைசலை வயல்களில் தெளித்து கட்டுப்படுத்தலாம். அதாவது 20 சதவீதம் சாண கரைசலுக்கு 200 கிராம் பசுஞ்சாணத்தை ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிய விட்டு வடிகட்டி அந்த கரைசலை எடுத்து வயலுக்கு தெளிக்க வேண்டும்.

செயற்கை பூஞ்சான கொல்லிகளான ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்கிளின் கலவை 120 கிராம் உடன் 500 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு கலந்து தெளிக்க வேண்டும். அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். மேற்கண்ட மேலாண்மை முறைகளை பின்பற்றி நெற்பயிரில் பாக்டீரியா இலை கருகல் நோயை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்