ஒப்பந்த தொழிலாளர்கள் 2-வது நாளாக தர்ணா

என்.எல்.சி. 2-வது சுரங்கத்தின் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2023-04-25 18:45 GMT

மந்தாரக்குப்பம்

பணி நிரந்தரம்

நெய்வேலி என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் தோட்டம், மாட்டுப்பண்ணை உள்ளிட்டவற்றில் 100-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளிகளாக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வருகின்றனர். இதுவரையிலும் இவர்களை என்.எல்.சி. நிர்வாகம் பணி நிரந்தரம் செய்யவில்லை.

எனவே பணிநிரந்தரம், ஊதிய உயர்வு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் என்.எல்.சி. 2-வது சுரங்க நிர்வாக அலுவலகத்தின் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய என்.எல்.சி.அதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி தாருங்கள் அதை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

அதன்படி ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தனர்.

3 நாட்களுக்குள் தீர்வு

இதன் பின்னர் அதிகாரிகள் எதுவும் பதில் கூறாததால் நேற்று மீண்டும் என்.எல்.சி. 2-வது சுரங்க நுழைவு வாசல் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதுபற்றிய தகவல் அறிந்துவந்த என்.எல்.சி. அதிகாரிகள் ஒப்பந்ததொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களின் கோரிக்கைகளுக்கு 3 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றனர். இதை ஏற்று தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்