கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டஒப்பந்த தூய்மை பணியாளர்கள்
சம்பள உயர்வு கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை
சம்பள உயர்வு கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்
கோவை மாநகராட்சியில் ஏராளமான ஒப்பந்த அடிப்படையிலான தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் தங்களுக்கு கலெக்டர் அறிவித்த தினக்கூலி ரூ.721-ஐ வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 20-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்காக அவர்கள் காலையில் கோவை வ.உ.சி. மைதானத்தில் உள்ள வ.உ.சி. சிலை முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவர்களின் போராட்டம் நேற்று 6-வது நாளாக நடந்தது.
முற்றுகை போராட்டம்
அவர்கள் தொழிற்சங்க தலைவர்கள் தலைமையில் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் கலெக்டர் அறிவித்த தினக்கூலி ரூ.721-ஐ மாநகராட்சி நிர்வாகம் தங்களுக்கு வழங்க அறிவுறுத்தக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் தொழிற்சங்க தலைவர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் கிராந்திகுமாரை சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில் நீங்கள் அறிவித்த தினக்கூலியான ரூ.721-ஐ வழங்க மாநகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
போராட்டம் வாபஸ்
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, எங்கள் கோரிக்கை தொடர்பாக மாலையில் தொழிலாளர் துறை அதிகாரிகள், மாநகராட்சி துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. குறைந்தபட்ச சம்பளம்கொடுக்க ஒப்புக் கொண்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது என்று தெரிவித்தனர்.