ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-06 19:30 GMT

தூய்மை பணியாளர்கள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் சின்னவளையம், செங்குந்தபுரம், மேலக்குடியிருப்பு, கீழக்குடியிருப்பு, வேலாயுத நகர், கரடிகுளம், கொம்மேடு உள்ளிட்ட 21 வார்டுகள் உள்ளன. ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ள 21 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 134 ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 155 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இதில் வார்டு ஒன்றுக்கு முன்பு 7 பேர் பணி செய்த இடங்களில் தற்போது 2 சிறிய பேட்டரி வாகனமும், தலா 2 தூய்மை பணியாளர்கள் ஒவ்வொரு வீடுகளாக சென்று 300 கிலோ மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சேகரித்து வர வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தினர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 134 பேரும் நேற்று பணியை புறக்கணித்து நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பேரூராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இன்று (நேற்று) விடுமுறை தினம் என்பதால் நாளை (இன்று) அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதில், சமாதானம் அடைந்த தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ரூ.400 கூலி வழங்க வேண்டும்

இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளாக எங்களுக்கு ரூ.242 கூலி வழங்கப்படுகிறது. மேலும், பாதுகாப்பு உபகரணங்களான கையுறை, சீருடை, துடைப்பம் உள்ளிட்டவை சரிவர வழங்காமலும் ஒருசில அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்து வருகிறார்கள்.

எனவே எங்களுக்கு நாள்தோறும் ரூ.400 கூலி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிடைக்கும் குப்பைகளை மட்டுமே கொண்டுவர முடியும். இதற்கு அளவீடு செய்யக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம்.

பாதபூஜை செய்த பொதுமக்கள்

கொரோனா காலகட்டத்தில் தூய்மை பணியாளர்களை தெய்வமாக நினைத்து வணங்கிய பொதுமக்கள் எங்களுக்கு பாதபூஜை செய்து பெருமைப்படுத்தினர். தற்ேபாது எங்களை நகராட்சி நிர்வாகத்தினர் அலட்சியப்படுத்துவது வேதனை அளிப்பதாக தெரிவித்தனர். மேலும், சிலர் படித்து விட்டு வேலை கிடைக்காமல் வேறு வழியின்றி இந்த வேலை செய்து வருவதாகவும், இருப்பினும் சம்பளம் மிகக்குறைவாகவே கிடைப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்