நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை:முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்124 அடியாக உயர்வு

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 124 அடியாக உயர்ந்தது.;

Update:2023-10-27 00:15 IST

முல்லைப்பெரியாறு அணை

 கூடலூர் அருகே தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

கடந்த மாதம் கேரள மாநிலத்தில் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதன் பிறகு மழைப்பொழிவு குறைய தொடங்கியது. இதற்கிடையே தமிழகத்துக்கு அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 120.5 அடியாக குறைய தொடங்கியது.

நீர்மட்டம் உயர்வு

இதையடுத்து நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 123.95 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 1617 கன அடியாக இருந்தது. இந்நிலையில் அணை பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருகிறது.

நேற்று முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.25 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 2,033 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 1,333 கன அடியாகவும் இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- முல்லைப்பெரியாறு 60.4, தேக்கடி 2.4, சண்முகா நதி 1.2, வைகை அணை 7, மஞ்சளாறு 4.1, பெரியகுளம் 17.

Tags:    

மேலும் செய்திகள்