தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கும்பகோணத்தில் அதிக பட்சமாக 67 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இந்த நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து பயிர் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 3 நாட்களுக்கு சில இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் அதிகாலை 1 மணி முதல் காலை 7 மணி வரை மழை பெய்தது. அதன் பின்னர் மழை இன்றி வெயில் காணப்பட்டது. இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று அதிகாலையிலும் 1 மணி முதல் மழை பெய்யத்தொடங்கியது.
குறுவை சாகுபடி
தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. தஞ்சை, திருவையாறு, நெய்வாசல் தென்பாதி, கும்பகோணம், பாபநாசம், மதுக்கூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. பின்னர் மழை தொடர்ந்து தூறிக்கொண்டே இருந்தது. காலை 7 மணி வரை இந்த மழை நீடித்தது.
இந்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. அதன் பின்னர் மழை இன்றி வெயில் காணப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உளுந்து அறுவடை பாதிப்பு
இந்த நிலையில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் நடவு செய்யப்பட்டுள்ள இளம் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் முன்பட்ட குறுவை அறுவடை பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மழை காரணமாக அறுவடை பணிகளும் தாமதம் ஆகி உள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை சாலையோரம் விவசாயிகள் குவித்து வைத்துள்ளனர். அதனை தார்ப்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர். மேலும் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டு கடந்த சில வாரங்களாக அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மழை பெய்து வருவதால் உளுந்து அறுவடை பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரத்தநாடு, மேலஉளூர், சூரக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உளுந்து அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அய்யம்பேட்டை
அய்யம்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. அய்யம்பேட்டை, மாகாளிபுரம், பசுபதிகோவில், சூலமங்கலம், சக்கராப்பள்ளி, உள்ளிக்கடை, கணபதி அக்ரகாரம், பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய, விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் இளம் குறுவை நெல் பயிர்கள் நீரில் மூழ்கியது. மேலும் வளர்ச்சி பருவத்தில் உள்ள கரும்பு, வாழை பயிர்களையும் வெள்ள நீர் சூழ்ந்தது. இந்நிலையில் காவிரி ஆற்றிலும் பெருமளவு தண்ணீர் செல்வதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். எனவே காவிரி ஆற்றில் தண்ணீர் அளவை குறைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மெலட்டூர்
மெலட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கோடையில் சாகுபடி செய்துள்ள பருத்தி செடிகளில் பூத்து இருந்த பஞ்சுகள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மழை அளவு
தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-கும்பகோணம் 67, மதுக்கூர் 58, நெய்வாசல் தென்பாதி 55, பாபநாசம் 54, அய்யம்பேட்டை 48, திருவையாறு 48, தஞ்சை 47, பட்டுக்கோட்டை 45, திருவிடைமருதூர் 44, மஞ்சளாறு 42, குருங்குளம் 30, பூதலூர் 28, வல்லம் 27, ஈச்சன்விடுதி 26, ஒரத்தநாடு 26, பேராவூரணி 23, வெட்டிக்காடு 20, திருக்காட்டுப்பள்ளி 17, கல்லணை 17, அதிராம்பட்டினம் 15, அணைக்கரை 12.