வயநாட்டில் தொடர் அட்டகாசம்:ஊருக்குள் புகுந்த புலி மதில்சுவரை தாண்டியது-சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
வயநாட்டில் ஊருக்குள் புகுந்து புலி அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் புலி ஒன்று ஊருக்குள் புகுந்து வீட்டின் மதில் சுவரைத் தாண்டி குதித்து ஓடும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கூடலூர்
வயநாட்டில் ஊருக்குள் புகுந்து புலி அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் புலி ஒன்று ஊருக்குள் புகுந்து வீட்டின் மதில் சுவரைத் தாண்டி குதித்து ஓடும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தொடர் அட்டகாசம்
தமிழக- கேரள மாநில எல்லையில் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி உள்ளது. இதன் சுற்றுவட்டார பகுதியான நூல்புழா, சீராள் ஆகிய இடங்களில் கடந்த சில தினங்களாக ஊருக்குள் புலி ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் கால்நடைகளை இழந்த பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று முன்தினம் புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி சீராள் பகுதியில் கடை அடைப்பு மற்றும் கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.
இதனால் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைவாக காணப்பட்டது. இந்த நிலையில் சுல்தான்பத்தேரி - கல்பட்டா செல்லும் சாலையில் புலி ஒன்று அடிக்கடி நடமாடுவதாக ரோந்து சென்ற போலீசார் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் 2 வாரங்களுக்கு முன்பு வெளியிட்டனர். மேலும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தியிருந்தனர்.
மதில்சுவரை தாண்டி குதித்த புலி
இந்த நிலையில் அதே சாலையில் உள்ள தொட்டப்பன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு புலி ஒன்று குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு வீட்டின் மதில் சுவர் மீது ஏறி குதித்து தப்பி ஓடியது. இந்த காட்சியை அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சுல்தான் பத்தேரி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் புலியை காணவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தொடர் பீதியில் உள்ளனர். மேலும் கூண்டு வைத்து உடனடியாக புலியை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.