மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 3 லட்சம் பேருக்கு தொடர் சிகிச்சை
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 3 லட்சம் பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 3 லட்சம் பேர் தொடர் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மக்களை தேடி மருத்துவம்
பொதுமக்கள் குடியிருக்கும் வீடுகளை தேடிச் சென்று அவர்களுக்கு மருத்துவ சேவை அளிக்கும் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் மருத்துவக் குழுவினர் பொதுமக்களின் வீட்டுகளுக்கே நேரடியாகச் சென்று பல்வேறு மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக தொற்றா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல், வயது முதிர்ந்த நபர்களுக்கு சேவை செய்தல், அவர்களுக்கு முடநீக்கு சிகிச்சை மற்றும் பயிற்சி அளித்தல், தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளை செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை, கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுதல், தாய்மார்களுக்கு பிரசவத்துக்கு பிந்தைய சேவை போன்ற மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
3.13 லட்சம்
இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உயர் இரத்த அழுத்தம் நோயினால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 23 ஆயிரத்து 356 பேரும், நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட 82 ஆயிரத்து 344 பேரும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட 63 ஆயிரத்து 263 பேரும், நோய் ஆதரவு சிகிச்சை 20 ஆயிரத்து 632 பேரும், இயன்முறை சிகிச்சை 23 ஆயிரத்து 678 பேரும், சிறு நீரக நோய்க்கு சுய டயாலிஸிஸ் செய்து கொள்வதற்கு தேவையான பைகள் பெற்றவர்கள் 14 பேர் ஆக மொத்தம் 3 லட்சத்து 13 ஆயிரத்து 285 பேரும் தொடர் மருத்துவ சேவை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.