நீரிழிவு நோயால் தொடர்ந்து அவதி: விஜயகாந்த் காலில் 3 விரல்கள் அகற்றம்

நீரிழிவு நோயால் தொடர்ந்து அவதியுற்று வந்த விஜயகாந்தின் 3 கால் விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன. இதனால், தே.மு.தி.க. தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-06-21 22:54 GMT

சென்னை,

தே.மு.தி.க. தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவ்வப்போது சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில், கடந்த 14-ந்தேதி மீண்டும் மருத்துவ பரிசோதனைக்காக விஜயகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை குறித்து டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பிறகு கடந்த 16-ந்தேதி அவர் வீடு திரும்பினார்.

3 விரல்கள் அகற்றம்

வீடு திரும்பிய நிலையில், விஜயகாந்தின் வலது கால் விரல்கள் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாதது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் ஆஸ்பத்திரியில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நீண்ட காலமாக நீரிழிவு நோய் இருந்து வந்ததால், வலது கால் விரல்கள் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். அதனைத்தொடர்ந்து, வலது காலில் கட்டை விரல் உள்பட 3 விரல்களை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி அறுவை சிகிச்சை மூலம் குறிப்பிட்ட 3 விரல்களும் அகற்றப்பட்டன.

ஓரிரு நாளில் வீடு திரும்புவார்

தற்போது ஆஸ்பத்திரியிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் டாக்டர்களின் ஆலோசனைப்படி நேற்று (அதாவது 20-ந்தேதி) விரல் அகற்றப்பட்டது. தற்போது உடல் நலம் சீராகி வருவதாகவும், அவரது உடல்நிலை குறித்து பரவும் பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்ட தகவலை கேள்விப்பட்டவுடன் அவரது ரசிகர்களும், தே.மு.தி.க. தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்