கோபி அருகே அடுத்தடுத்து 2 கோவில்களின் உண்டியலை உடைத்து காணிக்கை கொள்ளை

கோபி அருகே அடுத்தடுத்து 2 கோவில்களின் உண்டியலை உடைத்து காணிக்கையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2023-08-20 20:46 GMT

கோபி அருகே அடுத்தடுத்து 2 கோவில்களின் உண்டியலை உடைத்து காணிக்கையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

மகா மாரியம்மன் கோவில்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிங்கிரிபாளையத்தில் மகா மாரியம்மன் கோவில், கரியகாளியம்மன் கோவில் ஆகியவை அருகருகே உள்ளன. இந்த கோவில்களின் பூசாரியாக சிங்கிரிபாளையத்தை சேர்ந்த வெள்ளியங்கிரி (வயது 60) என்பவர் உள்ளார். 2 கோவில்களிலும் காலையில் நடை திறக்கப்பட்டு பூஜை நடத்தப்படும். பின்னர் கோவில்களை அடைத்து விட்டு பூசாரி சென்றுவிடுவார்.

இந்த நிலையில் நேற்று காலையில் அந்த வழியாக சென்ற சிலர் 2 கோவில் கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததுடன், உண்டியல்களும் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டனர். மேலும் அந்த பகுதியில் ரூபாய் நோட்டுகள் மற்றும் காசுகள் சிதறி கிடந்ததையும் பார்த்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து கோவிலின் பூசாரிக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் தெரிந்ததும் பூசாரி வெள்ளியங்கிரி கோவிலுக்கு வந்தார்.

உண்டியல் உடைப்பு

இதனிடையே இதுகுறித்த தகவல் கிடைத்ததும், கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்கு வந்த மர்ம நபர்கள், கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உள்ளனர்.

பின்னர் அவர்கள் கம்பி மற்றும் தேங்காய் உடைக்க பயன்படும் அரிவாள் ஆகியவற்றை கொண்டு கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து உள்ளனர். இதையடுத்து அதில் இருந்த காணிக்கைகளை அள்ளி சென்று உள்ளனர். அள்ளிச்செல்லும்போது காணிக்கையில் இருந்த 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் காசுகள் கீழே விழுந்து சிதறி உள்ளது,' தெரியவந்தது. இந்த கோவில்களில் கடந்த 6 மாதத்துக்கு முன்புதான் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே 2 கோவில்களிலும் சேர்த்து ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உண்டியல் காணிக்கை இருந்திருக்கலாம் என தெரிகிறது.

பக்தர்கள் அச்சம்

மேலும் கைரேகை நிபுணர்கள் ஈரோட்டில் இருந்து சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியல்களை உடைத்து காணிக்கைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த 16-ந் தேதி கோபி அருகே பொலவக்காளிபாளையத்தில் உள்ள அண்ணமார் சாமி கோவில்களில் திருட்டு சம்பவம் நடந்து உள்ளது. கோபி பகுதிகளில் தொடர்ந்து கோவில்களில் திருட்டு சம்பவம் நடந்து வருவதால் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்