கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு வழங்காததால் அவமதிப்பு வழக்கு: மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு வழங்காததால் அவமதிப்பு வழக்கில் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவிட்டது
திண்டுக்கல் கிழக்கு தாலுகா, முள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ராஜூ, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- கடந்த 2013-ம் ஆண்டில் ரெயில்வே தண்டவாள பணிகளுக்காக என்னுடைய நிலத்தில் ஒரு பகுதியை ரெயில்வே நிர்வாகம் கையகப்படுத்தியது. ஆனால் இதற்கான இழப்பீட்டுத்தொகையை வழங்கவில்லை.அந்த தொகையை குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2021-ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தேன். அதை விசாரித்த ஐகோர்ட்டு, 12 வாரத்தில் எனக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்கும்படி ரெயில்வே நிர்வாகத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டது.
ஆனால் இதுவரை இழப்பீட்டுத்தொகை எனக்கு கிடைக்கவில்லை. எனவே ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்ட மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இழப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் மாரிமுத்து ஆஜராகி, ரெயில்வே கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீட்டு தொகை கிடைக்காததால், மனுதாரரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர் மாற்றுத்திறனாளி என்பதால் பல்வேறு அசவுகரியங்களை சந்தித்து வருகிறார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.
விசாரணை முடிவில், மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் நேரில் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.