நுகர்வோர் உணவு பொருள் தொடர்பான புகார்களை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்கலாம்
தீபாவளி பண்டிகையையொட்டி நுகர்வோர் உணவு பொருள் தொடர்பான புகார்களை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
விழிப்புணர்வு கூட்டம்
பெரம்பலூரில் இனிப்பு மற்றும் பலகாரங்களை தயாரிக்கும் உணவு பொருள் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உணவு பாதுகாப்பு துறையின் பெரம்பலூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கவிக்குமார் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு மற்றும் கார வகைகள் மற்றும் பேக்கரி தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006, அதன் விதிமுறைகள் 2011-ன்படி கண்டிப்பாக உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு பெற்றிருக்க வேண்டும். தரமான மூலப்பொருட்களை தெரிந்த உணவு வணிகர்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும். அதற்கான முறையான ரசீது பெறப்பட்டிருக்க வேண்டும்.
சமையல் எண்ணெய்
உணவு பொருள் தயாரிக்கப்படும் மூலப்பொருட்களை அதற்குரிய காலாவதி நாட்களுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும். சுகாதாரமான முறையில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கப்பட வேண்டும். உணவு தயாரிக்கும் இடத்திற்குள் பூச்சிகள் நுழையாவண்ணம் பூச்சி கட்டுப்பாடு முறைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். உணவு கையாளுபவர்கள் அனைவரும் மருத்துவ தகுதி சான்று பெற்றிருத்தல் வேண்டும். பணியின்போது பணியாளர்கள் கையுறை, தலைக்கவசம், மேலங்கி அணிந்தே பணியாற்ற வேண்டும். உணவு தயாரிப்பில் அனுமதித்த அளவிற்குள் மட்டுமே செயற்கை வண்ணங்களை பயன்படுத்த வேண்டும்.
உணவு தயாரிப்பிற்கு பொட்டலமிடப்பட்ட எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்திய எண்ணெய்யை அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் வழங்க வேண்டும்.
வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்
உணவு பொட்டலமிடுதலில் விவர சீட்டு இடும்பொழுது, அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு மற்றும் பொட்டலமிட்ட தேதி, காலாவதி நாள், சைவ மற்றும் அசைவ குறியீடு, உணவு, பாதுகாப்பு உரிமம் எண், பதிவு எண், உணவு சேர்மானங்களின் விவரங்கள், ஊட்டச்சத்து விவரம், நுகர்வோர் புகார் எண்கள் போன்றவை அச்சிடப்பட்டு மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். வணிக நிறுவனத்தில் ஏதேனும் ஒருவர் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பைகளில் உணவை அடைத்து விற்பனை செய்யக்கூடாது. மேலும் கடைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் உணவு பொருட்களுடன் தயாரிப்பு மற்றும் காலாவதி விவரங்களும் காட்சிப்படுத்தப்பட வேண்டும். நுகர்வோருக்கு உணவு பொருள் தொடர்பான புகார் ஏதேனும் இருந்தால் 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இனிப்பு மற்றும் கார வகைகள், பேக்கரி தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மேற்கண்ட வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தவறுபவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.