பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க எல்.ஐ.சி.க்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க எல்.ஐ.சி.க்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-11-14 19:11 GMT

தாமரைக்குளம்:

சென்னை திருவான்மியூரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் உமாதேவி(வயது 47). இவரது தாய் மல்லிகா கடந்த 2011-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் ரூ.2 லட்சத்திற்கு காப்பீடு ெசய்திருந்தார். இந்நிைலயில் அவர் கடந்த 2015-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதையடுத்து காப்பீட்டு தொகை ரூ.2 லட்சத்தை தனக்கு வழங்க வேண்டும் என்று எல்.ஐ.சி. நிறுவனத்திடம் உமாதேவி கேட்டுள்ளார்.

ஆனால் அவரது தாய், உடல்நலக்குறைவு ஏற்பட்ட பின்னர் பாலிசியை பிரீமியம் செலுத்தி புதுப்பித்துள்ளார் என்பதால், காப்பீட்டு தொகை வழங்க இயலாது என்று எல்.ஐ.சி. நிறுவனம் தெரிவித்துவிட்டது. இதையடுத்து காப்பீடு தொகை ரூ.2 லட்சமும், அதனை தராமல் காலம் தாழ்த்துவதற்கு இழப்பீடாக ரூ.1 லட்சமும் வழங்க வேண்டும் என்று எல்.ஐ.சி. மீது உமாதேவி சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஜூலை மாதத்தில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு விசாரித்து, தீர்ப்பளித்தது. அதில், உமாதேவியின் தாய் நோய் வாய்ப்பட்டு மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்த விவரங்களை மறைத்து, பாலிசி காலாவதியான காலத்தில் தாம் எந்த சிகிச்சையும் பெறவில்லை என்று உறுதிமொழி அளித்து பிரீமியம் பாலிசியை செலுத்தி புதுப்பித்துள்ளார். இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட சில வாரங்களில் அவர் இறந்துவிட்டார். எனவே முழு காப்பீட்டு தொகையும் வழங்க தேவையில்லை.

ஆனால் அவர் செலுத்திய பிரீமியத் தொகை ரூ.57 ஆயிரத்தை கடந்த 7 ஆண்டுகளாக எல்.ஐ.சி. நிறுவனம், அவரது மகள் உமாதேவிக்கு வழங்காமல் இருந்தது சேவை குறைபாடு. எனவே இந்த தொகையை வட்டியுடனும், இழப்பீடாக ரூ.50 ஆயிரமும் உமாதேவிக்கு எல்.ஐ.சி. நிறுவனம் 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்