ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டுக்கு ரூ.5 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டுக்கு ரூ.5 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-09-05 17:46 GMT

உடல்நலக்குறைவு

பெரம்பலூரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன்(வயது 75). இவர் ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு. சுப்ரமணியத்திற்கு ரெத்தினாம்பாள் (65) என்ற மனைவியும், செல்வகுமார் என்ற மகனும், மகள்களும் உள்ளனர். சுப்ரமணியன் கடந்த 2003-ம் ஆண்டு போலீஸ்துறையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு மாவட்ட கருவூல அலுவலகம் வாயிலாக ஓய்வூதியம் பெற்றுவருகிறார். சுப்ரமணியன், அரசு மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின்கீழ் மருத்துவக்காப்பீட்டுக்கான பிரீமியம் சந்தாவும் முறையாக செலுத்திவந்துள்ளார்.

இந்த நிலையில் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ரெத்தினாம்பாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு மேல்சிகிச்சைக்காக திருச்சி தில்லைநகரில் 11-வது குறுக்குத்தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சுப்ரமணியன் ஏறத்தாழ ரூ.3 லட்சம் வரை மருத்துவ செலவு செய்துள்ளார்.

வழக்கு

இதுதொடர்பாக பெரம்பலூரில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சுப்ரமணியன் முறையிட்டார். ஆனால் தங்களது நெட்வொர்க் வரையறையில் ரெத்தினாம்பாள் சிகிச்சை பெற்ற மருத்துவமனை பட்டியலுக்குள் இல்லை என்று கூறி மருத்துவக்காப்பீட்டு தொகை வழங்க காப்பீட்டு நிறுவனம் மறுத்துவிட்டது. அதன்பின் ரெத்தினாம்பாளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் 19.2.2021 அன்று அவர் இறந்துவிட்டார்.

இந்த நிலையில் ரெத்தினாம்பாளுக்கு மருத்துவசெலவை, காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் காப்பீட்டு நிறுவனம் ஏற்றிருந்தால், அவரை உயிர்பிழைக்கவைத்து இன்னும் சில ஆண்டுகள் வாழவகை செய்திருக்கலாம் என்று கூறியும், ஏற்பட்ட மனஉளைச்சலின் காரணமாக சுப்ரமணியன் தனது வழக்கறிஞர் முருகேசன் மூலம் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பெரம்பலூர் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் கிளை மேலாளர் மற்றும் சென்னையில் உள்ள மண்டல அலுவலகத்தின் கோட்ட மேலாளர் மீது வழக்கு தொடர்ந்தார்.

நஷ்டஈடு

இதில் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தின் சார்பில் அலுவலர் எவரும் ஆஜராகவில்லை. இந்த வழக்கை நீதிமன்ற தலைவர் ஜவகர், நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் சுப்ரமணியன் மனைவிக்கு ஏற்பட்ட மருத்துவ செலவிற்குரிய காப்பீட்டுத்தொகையாக ரூ.2 லட்சமும், காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாடு காரணமாக சுப்ரமணியத்திற்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ.3 லட்சமும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரமும் 45 நாட்களுக்குள் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் மேற்கண்ட தொகைக்கு வருடவட்டியாக 9 சதவீதம் சேர்த்து வழங்கவேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்