லாரி டிரைவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
சேவை குறைபாடு காரணமாக லாரி டிரைவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க முதலீடு மற்றும் நிதி நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
லாரி டிரைவர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட விநாயகர் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் ராமகிருஷ்ணன் (வயது 40), லாரி டிரைவர். இவரை சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி நிறுவனத்தின் பெரம்பலூர் கிளை மேலாளர் காத்தவராயன், நிதி வசூல் நிர்வாகி பாஸ்கர் ஆகியோர் அணுகினர். தங்களது நிறுவனத்தில் வேறு ஒருவர் ஒப்பந்த முறையில் கடன்பெற்று தவணையை முறையாக செலுத்தாமல் விட்டிருந்த 14 சக்கரங்கள் கொண்ட லாரியை ராமகிருஷ்ணன் பெயருக்கு மாற்றம் செய்து, எளிய தவணைகளில் மாதாமாதம் குறிப்பிட்ட தொகையை செலுத்தும் வகையில் கடனுதவியும், (ஹையர் பர்சேஸ்) அடிப்படையில் ரூ.11 லட்சமும் நிதியுதவி தருவதாக கூறினர். மேலும் லாரியின் மீதான காப்பீடு மற்றும் அதில் ஏற்பட்டிருந்த பழுது ஆகியவற்றை சரி செய்து கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர்.
இதனை நம்பிய ராமகிருஷ்ணன், கிளை மேலாளர் மற்றும் நிதி வசூல் நிர்வாகி ஆகியோர் தந்த ஆவணங்களில் கையெழுத்திட்டு கொடுத்தார். முதல் தவணையாக ரூ.56 ஆயிரமும் செலுத்தினார். அடுத்தடுத்த தவணைகள் என மொத்தம் ரூ.3 லட்சத்து 36 ஆயிரம் செலுத்திவிட்டார்.
ரூ.1 லட்சம் இழப்பீட்டு வழங்க உத்தரவு
இந்தநிலையில் ராமகிருஷ்ணன், மேற்கண்ட லாரியின் பழுதுகளை நீக்கி, தனது பெயருக்கு பதிவு சான்றை மாற்றித்தருமாறு கிளை மேலாளர் மற்றும் நிதி வசூல் நிர்வாகி ஆகியோரிடம் முறையிட்டார். இதனை செய்து தராமல் ராமகிருஷ்ணன் அலைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ராமகிருஷ்ணன், பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றத்தில் சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதிநிறுவனத்தின் பொதுமேலாளர், பெரம்பலூர் கிளை மேலாளர், நிதி வசூல் நிர்வாகி, ஏரியா மேலாளர் (ரிசிவபில்ஸ்) ஆகிய 4 பேர் மீதும் தனது வக்கீல் சுப்ரமணியன் மூலம் கடந்த 2021-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர், லாரி டிரைவர் ராமகிருஷ்ணனிடம் முறையற்ற வணிகம் செய்தமைக்காகவும், நிதிநிறுவனத்தின் சேவை குறைபாடு மற்றும் மனஉளைச்சலுக்கு காரணமாகவும் இருந்துள்ள எதிர்மனுதாரர்கள் 4 பேரும் தனியாக அல்லது கூட்டாக இணைந்து ரூ.1 லட்சத்தை நிவாரணமாக ராமகிருஷ்ணனுக்கு வழங்க வேண்டும். மேலும் வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.