ரூ.10 ஆயிரம் வழங்க விவசாயிக்கு, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

ரூ.10 ஆயிரம் வழங்க விவசாயிக்கு, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-10-11 21:05 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சித்திடையார் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேலு. விவசாயியான இவர் அந்த கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் குத்தகைக்கு விவசாயம் செய்து வருவதால், அந்த நிலத்தை அளந்து காட்ட விண்ணப்பித்து சேவை கட்டணம் செலுத்தியுள்ளார். நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்பதால் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் மனு கொடுத்தால் மட்டுமே நிலத்தை அளக்க முடியும் என்று செந்துறை தாசில்தார் தெரிவித்துள்ளார். இதையடுத்து நிலத்தை அளக்க மறுத்து விட்டதாலும், செலுத்திய பணத்தை திரும்ப தராததாலும் அரியலூர் மாவட்ட கலெக்டர், உடையார்பாளையம் கோட்டாட்சியர் மற்றும் செந்துறை தாசில்தார் ஆகியோர் தனக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் அவர் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு, செந்துறை தாசில்தார் சேவை கட்டணத்தை மனுவுடன் பெற்ற பின்னர் அதனை ஆய்வு செய்து, இது தொடர்பான பதிலை சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பியுள்ளார். தாசில்தார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால்தான் நுகர்வோர் ஆணையத்தை அணுக வேண்டும். தாசில்தார் சேவை குறைபாடு புரியவில்லை. சிங்காரவேலுேவ கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். மாவட்ட கலெக்டரிடமும் எந்த மனுவையும் அவர் அளிக்கவில்லை. ஆனால் வழக்கில் மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர் ஆகியோர் காரணம் இல்லாமல் சேர்க்கப்பட்டு 3 ஆண்டுகள் இந்த வழக்கு நடைபெற்று உள்ளது. இதனால் சிங்காரவேலு வழக்கின் செலவிற்காக ரூ.5 ஆயிரத்தை மாவட்ட கலெக்டருக்கு 4 வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேபோல் மற்றொரு நிலத்தை அளந்து காட்டாதது தொடர்பாக சிங்காரவேலு தொடர்ந்திருந்த வழக்கிலும், அவர் ரூ.5 ஆயிரத்தை மாவட்ட கலெக்டருக்கு 4 வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பணம் செலுத்த உத்தரவிட்டதை மறுபரிசீலனை செய்து, அதனை ரத்து செய்யுமாறு சிங்காரவேலு மனு அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்